இதற்குத்தான் மும்மொழிக் கொள்கை தேவை..! கனிமொழி ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்..!

9 August 2020, 9:54 pm
SV_Sekhar_UpdateNews360
Quick Share

இன்று மதியம் தன்னை இந்தி தெரியாததால் இந்தியரா என விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டதாக திமுகவைச் சேர்ந்த எம்.பி. கனிமொழி சர்ச்சைப் பதிவு வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், இதற்காகத்தான் மும்மொழிக் கொள்கை வேண்டுகிறோம் என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கனிமொழி இன்று ஒரு விமான நிலையத்தில் தனது அனுபவத்தை விவரித்தார். அங்கு அவர் இந்தி பேசாததால் அவர் ஒரு இந்தியரா என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி கேட்டதாகக் கூறி பரப்பரப்பைக் கிளப்பியுள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதிருந்து இந்தி அறிந்து கொள்வது இந்தியராக இருப்பதற்கு சமமானது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில் அவருடைய ட்விட்டர் பதிவில் பதிலளித்த சிஐஎஸ்எஃப், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிப்பதற்காக அவருடைய பயண விவரங்களைக் கேட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் மேலும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப் கொள்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.  

இதற்கிடையே, மும்மொழிக் கல்விக்கு எதிராக பேசி வரும் திமுகவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே தேவையில்லாமல் இது போன்ற கருத்துக்களை கனிமொழி மூலம் திமுக தலைமை முன்னெடுத்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், கனிமொழியின் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “இதற்காகத்தான் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், வருங்கால சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தமிழ் பயில உதவும்.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது பயில உதவுவது போல, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தி பயிலவும் வாய்ப்பளிக்க வேண்டும். இந்தி இல்லாமல் இந்தியா என்ற வார்த்தையையே உச்சரிக்க முடியாது.” என ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Views: - 0

0

0