பா.ஜ.க. தலைவர் சொன்னா சொன்னதுதான் : அதிர்ச்சியில் திமுக, பரிதவிக்கும் ராகுல்!!
31 January 2021, 6:01 pmகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும் தமிழகத்தில் அதற்கு எதிர்மாறான சூழல்தான் இருந்தது. இதனால் வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? தொடராதா? என்ற கேள்வி அவ்வப்போது எழுந்த வண்ணம் இருந்தது.
2017-ம் ஆண்டு அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு, மிகுந்த அக்கறை காட்டியது. அப்போது முதலே அதிமுகவுடன் பாஜக இணக்கமாகவே செயல்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது தமிழக அரசு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் முன்பாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.
இந்த விழாவில் பேசிய அமித் ஷா அதிமுகவின் இந்த இரு தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு தமிழக அரசு நிறைவேற்றி வரும் நலத்திட்டங்களை பாராட்டியும் பேசினார்.
அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் அமித்ஷாவே இப்படி சொல்லி விட்டதால் நிச்சயம் அதிமுக-பாஜக கூட்டணி உண்டு என்றே பேசப்பட்டது.
ஆனால் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ஆசை காட்டிய சில அதி மேதாவிகள் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாஜக மேலிட தலைவர்கள் சிலரும் நாங்கள் சொல்பவர்தான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி அவ்வப்போது அதிமுகவுக்கு நெருக்கடியும் கொடுத்தனர்.
ஆனால் இந்த விஷயத்தில் அதிமுக தலைமை மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருந்தது. நாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி. அதேபோல் ஆட்சியில் யாரும் பங்கு கேட்கவும் கூடாது என்று அதிரடி காட்டி இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது.
இந்த நிலையில்தான் நடிகர் ரஜினி, தான் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என திடீரென்று ஜகா வாங்கினார்.
இதெல்லாம் பழைய நிகழ்வுகள் என்றாலும் கூட அதிமுகவுடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்று உறுதியாக கூறியவர்
ஒருவர் உண்டென்றால் அவர், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித்ஷாதான்.
அன்று அமித்ஷா சொன்னதுதான் இன்று உண்மையாகி இருக்கிறது.ரஜினி அரசியலுக்கு வருவார், நமக்கு ஆதரவு தருவார் என்று மணல்கோட்டை கட்டி மனம் நொந்து போயிருந்த அறிவு ஜீவிகள் எல்லாம் இன்று இன்னும் கப்சிப் ஆகிப் போனார்கள்.
ஆம். மதுரையில், நேற்றிரவு பாஜக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “அதிமுகவுடன் இணைந்து வருகிற சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம்” என்று திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்பு தனிப்பட்ட முடிவு அல்ல. பாஜகவின் தேசியத் தலைமையிடம் விரிவாக பேசிய பின்பே எடுக்கப்பட்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
பாஜகவில் அதன் தேசிய தலைவர் ஒரு முறை சொன்னால் சொன்னதுதான். அதுதான் அக்கட்சியின் இறுதி வாக்கும், வேத வாக்கும் கூட.
ஜே.பி.நட்டா அறிவித்தது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர், அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தி இருப்பதன் மூலம் சமீப காலமாக அரசல், புரசலாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டு வந்த அரசியல் ரீதியான பல்வேறு விஷம விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், என்றே கூற வேண்டும்.
மிக அண்மையில் டெல்லி சென்றபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பின்னர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவில் சசிகலாவுக்கு 100 சதவீதம் இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். தினகரனையும் கட்சியில் இணைக்க மாட்டோம் என்றும் அடித்துக் கூறினார்.
அவருடைய அந்த ஆணித்தரமான முடிவை இப்போது பாஜக மேலிடமும், அதன் தலைவர் ஜே.பி.நட்டாவும் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக மதுரை அறிவிப்பு அமைந்து இருக்கிறது.
இது பற்றி இனி தமிழக பாஜக தலைவர்கள் யாரும் வாய் திறந்து பேச மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.
இவர்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் பாஜகவுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம் என்று கூறி இதுவரை தவறான யோசனைகளை டெல்லி மேலிட பாஜகவுக்கு தந்து கடும் அழுத்தம் கொடுத்து வந்தவர்களும் இனி அமைதியாகி விடுவார்கள் என்று நம்பலாம்.
அதேபோல் உள்ளூர் பாஜக தலைவர்கள் இனி நாங்கள் சொல்பவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல முடியாத சூழலும் உருவாக்கப்பட்டு விட்டது.
தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என்பதை ஜே.பி.நட்டா வலியுறுத்துவதன் மூலம் இனி அதிமுக- பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்தே தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.
பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது அப்போது முடிவாகும்.
எனினும் இதில் தமிழக பாஜக தலைவர்களுக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கும் என்பதை சொல்ல இயலாது.
இனி பாஜகவின் தேசியத் தலைமைதான் அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பது, எவ்வளவு தொகுதிகளை பெற்றுக் கொள்வது என்பதை முடிவு செய்யும் என்று தெரிகிறது.
ஏற்கனவே அதிமுகவிடம் மாநில பாஜக கேட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான 38 தொகுதிகள் பட்டியல் உண்மையானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
எனினும் பாஜக போட்டியிடும் தொகுதிகளை இப்போதே முடிவு செய்துவிட மாட்டார்கள். எப்படியும் இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம். அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம்பெறப் போகின்றன என்பதை பொறுத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, இணைந்து செயல்படும் என்கிற ஜே.பி.நட்டாவின் அறிவிப்பை கேட்டு திமுகவும், காங்கிரசும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஏனென்றால் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும். அதனால் கூட்டணியில் சேர்வது தொடர்பான முடிவை இப்போதைக்கு வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். இன்னும் ஒரு மாதம் வரை இழுத்தடித்து பிறகுதான் அறிவிப்பார்கள் என்றே இந்த இரு கட்சிகளும் நினைத்திருந்தன.
ஆனால் ஜே.பி. நட்டா இதற்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டார் என்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தங்கள் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் பாஜக போல், இப்படி துணிந்து நாங்கள் திமுக அணியில்தான் இருக்கிறோம் என்று உறுதியாக கூற முடியாமல் திக்கித்திணறி தவிப்பதுதான் காங்கிரசின் பரிதாபம்!
0
0