தாழ்த்தப்பட்ட சமூக பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜகவின் வானதி சீனிவாசன்..!

21 November 2020, 7:45 pm
vanathi_srinivasan_updatenews360
Quick Share

பாஜக தேசிய மகளிரணி தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட தமிழக பாஜக பிரமுகரான வானதி சீனிவாசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாஜகவில் தேசிய அளவில் தமிழகத்திற்கு எந்தவித பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என குறைகூறப்பட்ட நிலையில், தமிழக பாஜகவின் பெண் தலைவரான வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் நடந்த விழாவில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், வானதி சீனிவாசன் பேரூர் ஆதினம் மற்றும் சிரவை ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இதற்கிடையே தனது சொந்த ஊரான உப்பிலிபாளையத்திற்கு சென்ற வானதி சீனிவாசன், அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றார். பின்னர் அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

பாஜகவின் வானதி சீனிவாசன் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக திமுகவின் தயாநிதி மாறன், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா” எனக் கூறியதும், ஆர்.எஸ்.பாரதி, “தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” எனக் கூறியதும் திமுகவின் ஆதிக்க சாதி மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிய நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் திமுக துணைத்தலைவரால் தரையில் அமர வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் வெளியில் சமூக நீதி எனப் பேசினாலும் திமுக தலைமை உள்ளுக்குள் சாதியப் பாகுபாட்டுடன் நடந்து கொள்வது இது சம்பவங்களால் வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில், பாஜக இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

மற்றொரு புறம் பாஜகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்சி என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனத்திற்கு மத்தியில், தலைவராக தாழத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை அமர வைத்து, அவரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வானதி சீனிவாசன் தாழ்த்தப்பட்ட பெண்களிடம் ஆசி வாங்கியுள்ளது அனைவராலும் பாஜக மீதான எண்ணத்தை மாற்றியமைத்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

Views: - 21

0

0