பாஜகவின் வேல்யாத்திரை விவகாரம் : தமிழக அரசின் முடிவிற்கு திருமாவளவன் வரவேற்பு..!!

5 November 2020, 12:16 pm
Thirumavlavan- updatenews360 (18)-Recovered
Quick Share

சென்னை : பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதியில்லை என்ற தமிழக அரசின் முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும், முருகப்பெருமானை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரையை தமிழக பாஜக அறிவித்துள்ளது. நாளை திருத்தணியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக திருச்செந்தூரில் டிச.,6ம் தேதி இந்த யாத்திரை முடிவடைகிறது.

இதனிடையே, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெற்றிவேல் யாத்திரையை பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறி, இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 9

0

0