சென்னை அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறை கைப்பற்ற முடியாது : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவின் கரு.நாகராஜன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 9:17 pm
Karu Nagarajan Arrest -Updatenews360
Quick Share

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் ஸ்ரீ ராம் சமாஜத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த மண்டபத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாகத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் சிலைகள் நிறுவுதல் மற்றும் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், இந்த மண்டபம் பொதுக் கோயிலா இல்லையா என்பது தொடர்பாக ஸ்ரீ ராம் சமாஜத் தலைவர் ரிட் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி இதைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

இது கோயில் அல்ல என்றும், ஆகம சாஸ்திரப்படி பொதுமக்கள் வழிபடுவதற்காகச் சிலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், ராமர், சீதை, அனுமன் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாகவும் மனுதாரர் கூறினார்.

இருப்பினும், சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுவதாலும் இது கோயில் என்றே அறநிலையத் துறை வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக முடிவு எடுக்க ரிட் மனு மூலம் விண்ணப்பிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

மேலும், அறநிலையத்துறையின் நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட மன்றத்தின் முறையீடு செய்ய அனுமதி இருப்பதாகவும் நீதிபதி கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியா கோயிலை அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், இதை எதிர்த்து பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்தியா மண்டபம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது நிகழ்ச்சிகளுக்காகச் செயல்பட்டு வருவதாகவும் இதை இந்து சமய அறநிலையத்துறையினர் கைப்பற்ற முடியாது என்று கூறி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசின் இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கையகப்படுத்த முயற்சி செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் குற்றம்சாட்டினர்.

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய போலீசார் முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 436

0

0