கோவையில் 30 பேரின் கண்களை பறித்த கரும்பூஞ்சை தொற்று : அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்!!

5 July 2021, 3:09 pm
Black Fungus Dean- Updatenews360
Quick Share

கோவை : கரும்பூஞ்சை நோயால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டு அழுகிய சதை திசுக்கள் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்படுகின்றன.

ஆய்வு முடிவின் அடிப்படையில் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, மூக்கு எலும்புகள் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டுள்ளது.

இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையில் வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் குணமடைந்துள்ளனர்
எனவே அலட்சியமாக இல்லாமல் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து சளியுடன் ரத்தம் கலந்து வருதல், கண் வீக்கம், முக வீக்கம், கண் சிவப்பாக மாறுதல், தலைவலி, பல்வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கட்டுப்பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 143

0

0