4 மாதங்களுக்குப் பிறகு குமரியில் இன்று படகு சேவை துவக்கம் ; சுற்றுலா பயணிகள் திரளுவார்கள் என எதிர்பார்ப்பு..!!

Author: Babu Lakshmanan
23 August 2021, 8:15 am
kumari - thiruvalluvar statue - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பூம்புகார் படகு சேவை துவங்குகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் போன்றவைகள் மறுஅறிவிப்பின்றி மூடப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை மற்றும் பூம்புகார் சுற்றுலா படகு சேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்பொழுது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டது.

டாஸ்மாக், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை இரவு 10 மணிவரை திறந்திருக்க அனுமதிஅளிக்கப்பட்டது. மேலும் பள்ளி,கல்லூரிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. வழிபாட்டு தலங்கள் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி வியாபாரிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் பல்வேறு தளர்வுகள் அறிவித்தது. அதன்படி சுற்றுலா தலங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு 4 மாத காலத்திற்கு பிறகு இன்று காலை 10:30 மணிக்கு படகு சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 431

0

0