தமிழகத்தில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 4:19 pm
Minister Subramaniam - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால், தமிழகத்திலும் அதைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட மகாராஜபுரத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து, அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காத்திட, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே தமிழக முதல்வர் மாற்றி இருக்கிறார்.

அந்த வகையில், தமிழகத்தில் இன்றைக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 79 சதவீதத்தை கடந்துள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 45 சதவீதத்தை கடந்துள்ளது.

பொதுமக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான், இந்த பேரிடரில் இருந்து மீள முடியும். இந்த கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாகி, அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒமிக்ரான் தொற்று பரவல் உள்ள ஹைரிஸ்க் நாடுகளிலிருந்து வருபவர்களை சென்னை, மதுரை விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள்.

நேற்றுகூட, வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த மூவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறிய படவில்லை. சுகாதாரத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக 40 ஆயிரம் பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களது பணி நிரந்தர கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால், தமிழகத்திலும் அதைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Views: - 163

0

0