அமைச்சரை வரவேற்க கட்சி கொடி ஊன்றிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி : சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 7:21 pm
விழுப்புரம் : திருமண நிகழ்ச்சிக்காக அமைச்சரை வரவேற்க கட்சி கம்பம் ஊன்றிய போது மின்சாரம் தாக்கிய சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர அமைச்சர் க.பொன்முடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சரின் வருகைக்காக சாலையோரத்தில் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டன. இதில் கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்தார்.
உதவிக்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் 13 வயது மகனை அழைத்து சென்றுள்ளார். அப்போது கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.
இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். இது குறித்து சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுவனின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் 13 வயது சிறுவனை தொழில் செய்ய அழைத்து சென்ற வெங்கடேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0