மாஞ்சா நூலில் சிக்கிய காகம்: போலீசார் உதவியுடன் உயிருடன் மீட்ட சிறுவன்…குவியும் பாராட்டு..!!

20 July 2021, 5:19 pm
Quick Share

சென்னை: போரூர் அருகே காத்தாடியின் மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை போலீசாரை அழைத்து மீட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சஞ்சீவ். ஆறாம் வகுப்பு படிக்கும் இவர், இன்று காலை யோகா பயிற்சி செய்வதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த மரத்தில் காத்தாடியின் மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்ட காகம் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனை கண்டதும் பதறிப்போன சஞ்சீவ் காகத்தை மீட்க வேண்டும் என முடிவுசெய்துள்ளான். இதனையடுத்து காரம்பாக்கத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிக்கு நடந்தே சென்று, அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் மரத்தில் காகம் ஒன்று சிக்கியிருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, கையோடு போலீசாரை அழைத்து வந்தார். போலீசார் அதனை கண்டு தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்குவந்த ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள், காத்தாடியின் மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காகத்தை மீட்டு சுதந்தரமாக பறக்க விட்டனர். மாஞ்சா நூலில் காகம் சிக்கி இருப்பதை கண்டு அதனை காக்க வேண்டும் என உரிய நேரத்தில் தகவல் கொடுத்து காகத்தை மீட்க உதவி செய்த சிறுவனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Views: - 98

0

0