யானைகள் மீது கல் வீசி தாக்கிய சிறுவர்கள் : ஆக்ரோஷமாக துரத்திய காட்சி!!

6 May 2021, 10:38 am
Elephant -Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை வனப்பகுதியில் யானைகள் மீது சிறுவர்கள் கற்கள் வீசியும், தடியால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் வனப்பகுதியில் உலா வரும் யானைகள் மீது மலைவாழ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் யானைகள் மீது கற்கள் வீசியும், கம்புகளால் விரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவானது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் சேர்ந்து யானைகள் மீது கற்கள் வீசியும், கம்புகளால் அடித்து விரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் யானைகளின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. கற்களை வீசி தாக்கும் போது வலி தாங்காமல் குட்டி யானைகள் பிளிறவே, தாய் யானை ஆக்ரோஷமடைந்து சிறுவர்களை துரத்துவது போன்ற ஆபத்தான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
சிலர் யானைகளிடம் சிக்காமல் இருக்க மரத்தின் மீது ஏறி அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும், நாய்களை விட்டு யானைகளை துரத்துவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. யானைகள் துன்புறுத்தப்படும் இந்த காட்சியை கண்ட வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வீடியோ காட்சியை வைத்து, யானைகளை துன்புறுத்தியவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை செய்து வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Views: - 178

0

0