வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளை..!! இருவர் கைது..!!

22 September 2020, 11:02 am
Quick Share

கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சித்ரா நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் துரைசாமி (70). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது உறவினர் இல்ல திருமணத்திற்காக வெளியூர் சென்றுள்ளார்.


இந்நிலையில், இன்று கோவை திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்க உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.


பின்னர் இது குறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டம் விற்ற வகையில் கிடைக்கப் பெற்ற பணம் 30 லட்ச ரூபாய் மற்றும் 10 பவுன் நகையை பீரோவில் வைத்துவிட்டு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து, அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் முன்னாள் குற்றவாளிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து கணேஷ்குமார்‌, பிரசாத்ராஜா ஆகிய இருவரை கைது செய்த தனிப்படையினர், அவர்களிடம்‌ இருந்து ரூ.16,57,000 மற்றும்‌ சுமார்‌ ஐந்தரை பவுன்‌ நகையை மீட்டனர்.

மேலும், குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‌. இதனை தொடர்ந்து, இவ்வழக்கில்‌ சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காவல்‌ ஆணையர்‌ வெகுவாக பாராட்டினார்‌.