வீட்டு மனைக்கு அப்ரூவல் வாங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரிகள்!!!

27 February 2021, 11:18 am
Bribery Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : வீட்டு மனைக்கு டிடிசிபி அப்ரூவல் சான்றிதழ் வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இருவர் கைது.

திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முத்துக்குமாரவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சியில் விற்பனைக்காக வீட்டுமனைகள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வீட்டுமனைக்கு டிடிசிபி அப்ரூவல் சான்றிதழ் வேண்டி பழங்கரை ஊராட்சி மன்றத்தில் விண்ணப்பித்து அப்பணிகளை முத்துக்குமாரவேல் மேற்கொண்டு வந்தார். இதில் அப்ரூவல் வழங்க பழங்கரை ஊராட்சி மன்ற எழுத்தர் செல்வம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அப்பணத்தை சான்றிதழ் வழங்கும்போது ரெக்கார்டர் சங்கரிடம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துக்குமாரவேல் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து செல்வம் மற்றும் சங்கரை தீவிரமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்த நிலையில், அவிநாசி ஊராட்சி மன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் சான்றிதழ் வழங்கி விட்டதாகவும் இன்று 25 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை ரெக்கார்டர் சங்கரிடம் கொடுத்து விட்டு சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு எழுத்தர் செல்வம், முத்துக்குமாரவேலிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயண பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவிநாசி – திருப்பூர் சாலையில் உள்ள பழங்கரை ஊராட்சி கணினி வரிவசூல் மையத்தில் வைத்து முத்துக்குமாரவேல் ரெக்கார்டர் சங்கரிடம் n நேற்று மாலை கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை சங்கர் பெறும்போது அங்கு காத்திருந்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து ரெக்கார்டர் சங்கர் மற்றும் எழுத்தர் செல்வம் என இருவரையும் கைது செய்து ரசாயணம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.

மேலும், கணினி வரிவசூல் மையத்தில் சோதனையும் மேற்கொண்டனர். சோதனையை அடுத்து செல்வம், சங்கர் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரனிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டுமனை டிடிசிபி அப்ரூவல் சான்றிதழ் வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று இருவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 15

0

0