தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்.. இலங்கை கடற்படையினர் மீது அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 10:46 am
Srilankan Navy - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32), முருகன்(54) ஆகிய 6 மீனவர்களும் கடந்த 21-ந்தேதி இரவு தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு குழாயால் கொடூரமாக தாக்கினர்.

மேலும் மீனவர்களின் ஜி.பி.எஸ்.கருவி, தூண்டில், பேட்டரி ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதில் 6 மீனவர்களுக்கும் உடலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கரை திரும்பிய மீனவர்களை தரங்கம்பாடி மாவட்ட தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்து 6 மீனவர்களையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும நாகை கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் கடலோர போலீசார் மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். மேலும், கலெக்டர் மகாபாரதி மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது கூட்டுக்கொள்ளை, கொடூரமாக தாக்குதல், அத்துமீறி நுழைந்து திருடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 258

0

0