தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கொலை? கழிவறையில் இருந்து சடலமாக மீட்பு!!

Author: Udhayakumar Raman
4 December 2021, 3:48 pm
Quick Share

தஞ்சை: தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மூழ்கி நிலையில், பிறந்த பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்ய சென்ற துப்புரவுத் தொழிலாளர்கள் அக் கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையில் பெண் குழந்தை ஒன்று மூழ்கிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இதுபற்றி மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவர்கள் கொடுத்த தகவலின்பேரில், டவுன் டிஎஸ்பி கபிலன், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஃப்ராங்க்ளின் உட்ரோ வில்ஸன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கான வார்டு கிடையாது.

இந்நிலையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மருத்துவமனை கழிவறை தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்ததால், அக்குழந்தை வெளியே பிரசவிக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும், அக்குழந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் இங்கே கொண்டு வரப்பட்டு கழிவறை தண்ணீர் தொட்டியில் போடப்பட்டதா அல்லது உயிருடன் கொண்டுவரப்பட்டு கழிவறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்யப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை. எனவே, மருத்துவமனை கழிவறைப் பகுதிக்கு யார், யார் வந்து சென்றனர் என்பதை அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அக்குழந்தை இறந்தே பிறந்துள்ளதாக (still born baby) முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் கொண்டு வந்து போட்டது என்பது குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Views: - 233

0

0