பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..!
12 August 2020, 12:35 pmகிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் நடத்தி 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. மேலும், தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், பங்குதாரர் சகாதேவன் ஆகியோர் மீது வழக்குப்பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தாரை விடுதலை செய்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
அதில், கிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கனிம வள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்தில் தனக்கு வசதியுள்ள ஒரு நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்சுல் மிஸ்ரா ஆஜராகிய நாளிலிருந்து 2 மாதங்களில் 2 தரப்பு வாதங்களையும் கேட்டு, கனிம வள சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளது.