பேருந்து மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி : பழனி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த போது நிகழ்ந்த துயரம்!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 11:49 am
Quick Share

திண்டுக்கல் அருகே காரும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித் (26). இவர் கொரியர் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்திலிருந்து தனது மனைவி, இரண்டு வயது குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தனது நண்பரின் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

காரை அபிஜித்தின் நண்பர் கண்ணன் (29) என்பவர் ஓட்டினார். அந்த கார் மதுரை – பழனி நெடுஞ்சாலையில் பண்ணைப்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் பழனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் கண்ணன், அபிஜித் , அசோக் உள்ளிட்ட எட்டு பேரும், பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அபிஜித்தின் இரண்டு வயது குழந்தைக்கு பழனியில் முடி காணிக்கை செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு குடும்பத்தோடு காரில் வந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 441

0

0