ஓசூர் அருகே தொழிலதிபர் உட்பட 3 பேர் காரில் எரித்து கொன்ற வழக்கு : முக்கிய குற்றவாளி கைது!!

29 January 2021, 1:53 pm
Hosur Arrest - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே பெண் தொழிலதிபர் மற்றும் அவரது கார் ஒட்டுநர் ஆகிய இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த ஆனந்தபாபு என்பவரின் மனைவி நீலிம்மா மற்றும் அவரது கார் ஒட்டுநர் முரளி ஆகிய இரண்டு பேர் தொழில் போட்டி காரணமாக ஒசூர் அருகேயுள்ள சானமாவு என்ற இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய உத்தனப்பள்ளி போலீஸார் 13 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஒசூரை சேர்ந்த ஜே.ஆர் என்ற ராமமூர்த்தி என்பவரை பல மாதங்களாக தேடிவந்தனர்.

தலைமறைவாக இருந்த அவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரது முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து உத்தனப்பள்ளி போலீஸார் ராமமூர்த்தியை இன்று கைது செய்தனர். உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் இருந்த அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை போலீஸார் ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து ஒசூர் ஜே.எம் 2 நீதிபதியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீஸார் அவரது முன்பு குற்றவாளி ராமமூர்த்தியை ஆஜர்படுத்தினர். அப்போது ராமமூர்த்தியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமூர்த்தி அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறும்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ஒசூர் கிளை சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Views: - 2

0

0