ஜல்லிக்கட்டில் காளைகளை கட்டையால் தாக்கிய கொடூரம் : மாட்டின் உரிமையாளரை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

Author: kavin kumar
20 January 2022, 10:59 pm
Quick Share

மதுரை : மதுரையில் காளைகளை கட்டையால் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில், மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாடிவாசலில் காளைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தன. அப்போது நெரிசல் காரணமாக வரிசையில் இருந்த காளை ஒன்று பவுன் என்பவரது காளையை கொம்பால் முட்டியுள்ளது. இதில் தனது காளை சிறு காயம் அடைந்ததால் ஆத்திரமடைந்த பவுன், கட்டையால் அங்கிருந்த பிற காளைகள் மற்றும் காளையின் உரிமையாளர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார்.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உடனடியாக சென்று நிலைமையை சீர் செய்து வரிசைப்படுத்தினார்கள். இச்சம்பவத்தில் எந்தக் காளைக்கும் மற்றும் காளையின் உரிமையாளர் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. காயம்பட்ட பவுன் என்பவரின் காளைக்கு முதலுதவி செய்யப்பட்டு காளை வெற்றிகரமாக வாடி வாசலை கடந்து சென்றது. இருப்பினும் பவுன் என்பவர் காளைகளை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டியின் உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி பவுல் என்பவர் மீது பாலமேடு காவல்நிலையத்தில் பிரிவு 11 (1) (a) தமிழ்நாடு விலங்கு வதைச் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி பவுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Views: - 295

1

0