நாகையில் மத்திய குழு ஆய்வு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!!

5 February 2021, 3:44 pm
nagai aayvu - updatenews360
Quick Share

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினரிடம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு வந்தனர்.

அங்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சேசிங், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குநர் ஷீபம் கார்க், மத்திய மீன்வள மேம்பாட்டு துறை ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கீடு செய்தனர்.

இன்று 2வது நாளாக நாகை மாவட்டத்துக்கு வந்த ஆய்வுக்குழுவினர் கீழையூர் தாலுகா கருங்கண்ணி பகுதி வயல்களில் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது நெல்மணிகள் முளைத்ததால் அனைத்தும் பதராகி விட்டது. பயிர்கள் அனைத்தும் மழையால் வீணாகி விட்டது. எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

அதற்குரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் உளுந்து, நிலக்கடலை பயிர்களையும் பார்வையிட்டு சேத அளவை கணக்கீடு செய்தனர். இதையடுத்து அங்கிருந்து பாலையூர் பகுதியில் ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து மத்திய குழு கடலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Views: - 26

0

0