காபூலில் இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது : சி.பி.எம் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2021, 12:19 pm
கோவை : ஆப்கானிஸ்தான் காபூலில் இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாவட்ட செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுவதை ஒட்டி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவைக்கு வருகை அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி களை அரசி தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தமிழக முதல்வர் செங்கல்பட்டு, குன்னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோலிய பொருட்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளால் மட்டுமே கடந்த 2020-21 ஆண்டில் 3.71 லட்சம் கோடி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோலிய பொருட்களின் மீது போடப்பட்ட வரியை குறைப்பதன் மூலமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்கள் போன்ற பலரும் பெகாசஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதனை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினார்.
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்தியர்களை காக்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர் எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப் பட்டனர் என்ற தகவல் அரசிடம் இல்லை என்றும் கூறினார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை பயங்கரவாத நாள் என்று பாஜக அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர் 1938 லேயே சவார்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார்.
மேலும் 1940க்கு பின் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்ததை தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பாஜக யாத்திரை நடத்தி வருகிறது இது கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எம்பி பி.ஆர்.நடராஜன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
0
0