சுகாதாரத்துறையில் தமிழகம் சபாஷ்… மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழாரம்..!

1 March 2020, 7:01 pm
Harshvardhan 01 updatenews360
Quick Share

சுகாதாரத்துறையில்  தமிழகம் நாட்டிலேயே சிறந்து விளங்குவதாக, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே, 22.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.479 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: தமிழக முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.  தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்து, அதில் இன்று இரண்டு புதிய மருத்துவகல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு நவீன வசதிகளுடன், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.  தமிழகம் மென்மேலும் வளர்ச்சி பெற, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

சுகாதாரத்துறையில், நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாட்டால், குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு விகிதம் உள்ளிட்டவை வெகுவாக குறைந்துள்ளது.

தரமான மருத்துவ சிகிச்சை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இதை மக்களுக்கு வழங்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. புதிய இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சியில் தமிழகத்தின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.