தமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

14 April 2021, 1:31 pm
Nellai heavy Rain-Updatenews360
Quick Share

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வருகிற 17ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8 செ.மீ மழையும், ஆரணி, சோலையார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Views: - 33

0

0