வலுவடைந்த ‘டவ் தே’ புயல்: பல இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!!

15 May 2021, 12:40 pm
Quick Share

சென்னை: அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் டவ் தே புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‘டவ் தே’ புயலாக வலுப்பெறும். அதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது,

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் மாலை ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அது இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது.

புயல் காரணமாக 15ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16, 17 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 18-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக 15ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், 16ம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 128

1

0