தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…வானிலை மையம் அலர்ட்..!!

Author: Aarthi Sivakumar
4 August 2021, 5:45 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 6ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.,7 மற்றும் 8ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவிம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 266

0

0