தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!!

14 January 2021, 8:25 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலையில் உள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 12ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் இன்றும் , நாளையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இந்த நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல், நாளை மறுதினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்துள்ளது.

Views: - 8

0

0