42 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் : கடல் கடந்து மீட்டு வந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு..!!
20 November 2020, 4:08 pmசென்னை : 42 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து இங்கிலாந்திற்கு திருடிச் செல்லப்பட்ட கோவில் சிலைகளை மீட்டு வந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 1978ம் ஆண்டில் நாகை மாவட்டம் அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள ராஜகோபாலசாமி கோவிலில் இருந்த ராமர், சீதை மற்றும் லட்சுமணர் சிலைகள் திருடப்பட்டது. இந்த சிலைகள் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா தரப்பில் ஆய்வு மேற்கொண்ட போது, அது அனந்தமங்கலத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்திய அரசின் சார்பில் தேவையான ஆதாரங்கள் இங்கிலாந்து அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பிறகு, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரிடம் அந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, மீட்கப்பட்ட சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் ஒப்படைத்தனர். 3 சிலைகளும் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சிலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். அப்போது, சிலைகளை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த சிலைகள் நாளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0