சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 12 வாகனங்களில் வந்த வீரர்கள் போராட்டம்!!
26 September 2020, 12:57 pmசென்னை : ஐ.சி.எப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை நியூ ஆவடி சாலையில் ஐ.சி.எப் தொழிற்சாலை உள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ரயில் பெட்டிகள் தயாரிக்க தனித் தனியாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது , எலக்ட்ரிக்கல் , பெயிண்டிங் என அனைத்து பணிகளுக்கும் ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தயாரிக்கப்படும்.
ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகம் 54 வது குடோன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இங்கிருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது கண்டு ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் வில்லிவாக்கம் , அண்ணா நகர் , செம்பியம் , எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தீயணைப்பு துறை தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.