ஆன்லைனில் ரம்பம் வாங்கிய ஐடி ஊழியர்… பிஞ்சு குழந்தைகள் உள்பட குடும்பத்தையே சிதைத்த கொடூரம்… போலீசாரிடம் சிக்கிய 2 பக்கக் கடிதத்தில் பகீர்…!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 2:46 pm
Quick Share

சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை ஐடி ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர், தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு காயத்ரி (39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13) என்ற மகளும், அரி கிருஷ்ணன் (9) என்ற மகனும் இருந்தனர். இவர்கள், நேற்றிரவு வழக்கம் போல தங்களின் வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் வெகுநேரமாகியும் அவர்களின் கதவு திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், யாரும் கதவை திறக்காததால், அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது, பிரகாஷ் உள்பட நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போகினர். பின்னர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், மனைவி, மகன், மகளின் கழுத்தை எலக்ட்ரிக் ரம்பத்தால் கொடூரமாக அறுத்து கொலை செய்து விட்டு, பிறகு அதே ரம்பத்தினால் பிரகாசும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அதில், அவர் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவரது செல்போனை ஆய்வு செய்ததில், கடந்த 9ம் தேதி தான் ஆன்லைனில் எலக்ட்ரிக் ரம்பத்தை பிரகாஷ் ஆர்டர் போட்டதும், அந்த ரம்பத்தின் மூலம் தனது குடும்பத்தையே சிதைத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது செல்போனில் அழைப்புகளை ஆராய்ந்து, தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 655

0

0