ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை… குடும்பத்தோடு ஆன்மீகச் சுற்றுலா சென்றிருந்த போது திருடர்கள் கைவரிசை…!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 11:20 am
Quick Share

சென்னையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூ முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (64). இவர் அம்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த செவ்வாயன்று தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார்.

இவர் கும்பகோணத்தில் இருக்கும் போது எதிர் வீட்டில் வசிக்கும் வசந்தி என்பவர் ஜெயச்சந்திரனை தொடர்பு கொண்டு உங்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, ஜெயச்சந்திரன் கேளம்பாக்கத்தில் வசிக்கும் அவரது மகள் ஷர்மிளா என்பவருக்கு போன் செய்து உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறினார்.

ஷர்மிளா சம்பவ இடம் வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஷர்மிளா கொடுங்கையூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை எடுத்துள்ளனர். மேலும், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 786

0

0