சென்னை துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொலையான வழக்கு : ஓய்வு பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரியிடம் விசாரணை!!

22 November 2020, 6:08 pm
Chennai Gun Shoot - Updatenews360
Quick Share

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலில் சந்த் (வயது 74) சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி இவரையும், மகன், மனைவி ஆகியோரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஷீத்தலின் மனைவி ஜெபமாலாவின் குடும்பத்தினர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு, ஜெபமாலாவை தேடி வந்தனர்.

இந்த சூழலில், கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பிறகு, அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று 3 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தலைமறைவாக இருந்த ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர் விகாஷ், ராஜேஷ் ஆகியோரை டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மாமனார் தலில் சந்த் உள்ளிட்டோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அவர்களை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜெயமாலா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து, போலீசார் விசாரித்து வந்த நிலையில் முன்னாள் விமானப் படை அதிகாரியை விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி ராஜேஷ் துபேவிடம் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கி கொடுத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.