போதையில் காவலரை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்ய முயன்ற திமுக பிரமுகர் கைது..!

By: Babu
8 October 2020, 12:33 pm
chennai dmk cadre arrest updatenews360
Quick Share

சென்னை : மதுபோதையில் காவல்துறை உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்ற திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 4ம் தேதி இரவு நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையின் அருகே உள்ள சாலையில் அமர்ந்து இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஆதம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் (54), ஹாரன் அடித்து வழிவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், குடிபோதையில் இருந்த இளைஞர்கள், காவலர் என்று கூட பாராமல் அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், பீர் பாட்டிலை எடுத்து காவலர் மோகன்தாஸின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு, பீர் பாட்டிலை எடுத்து காவலரின் தலையில் அடித்து உடைத்துள்ளனர். இதனால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து, அவரைத் தள்ளி விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தின் சாவி மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்தவர்களின் உதவியால் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் மோகன்தாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 10 தையலும், இடது கண் புருவத்தின் அருகே 3 தையலும் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பரங்கிமலை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது 341, 294(b), 324, 332, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்த பகுதியின் அருகே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, காவலரை தாக்கியது, ஆலந்தூரை சேர்ந்த 162 வட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திமுக பிரமுகர் வினோத்குமார்(30), அஜித்குமார்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.

Views: - 79

0

0