48 மணி நேரத்துக்கு மழை அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்…! மீனவர்களுக்கும் எச்சரிக்கை

11 August 2020, 2:42 pm
weather _UpdateNews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை கொட்டி வருகிறது. ஆனால் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. நீலகிரியில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். 24 மணி நேரத்தில் அதிகளவாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம், பரம்பிக்குளம் பகுதிகளில் தலா 3 செ.மீ, சோலையார், சின்கோனா, அவலாஞ்சி பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகையால்  மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.