ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி… தமிழகத்திற்கு தூய காற்று திட்டம் தேவை : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்புமணி கோரிக்கை

Author: Babu Lakshmanan
16 September 2021, 5:55 pm
Anbumani 02 updatenews360
Quick Share

தமிழகத்தில் தூய காற்று திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மாநில தூயக்காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 29.7.2021-ல் அளித்துள்ள உத்தரவு தொடர்பாக தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
ஒரு முழுமையான, அறிவியல் பூர்வமான மாநில தூயக்காற்று செயல் திட்டத்தை, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறேன்.

உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான்.

இந்தியாவில் உயிரிழக்கும் 8 பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார். காற்று மாசுபாட்டினால் 40 சதவீதம் இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது. கொரோனா நோய்த் தொற்றில் இறந்தவர்களில் கணிசமானோர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனின் உயிர்வாழும் உரிமையை உறுதி செய்கிறது. எனவே, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் தள்ளிப்போடக்கூடாது. தமிழ்நாடு அரசு உடனடியாக மாநில தூயக்காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், மக்கள் நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் முழு அளவிலான கருத்துக் கேட்பினை நடத்தி தூய காற்று செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் ஊராட்சிகள், நகராட்சிகள், மாநராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டங்கள் என அனைத்து படிநிலைகளிலும் மாசுக்காட்டுப்பாட்டை செயலாக்கும் வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான மாநில தூய காற்று செயல்திட்டத்தை தமிழ்நாட்டிற்காக உடனடியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தங்களைக் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 213

0

0