பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
24 August 2020, 7:59 pmஅமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக வரும் ஆக.,26ம் தேதி முதல் டிச., 24ம் தேதி வரை 120 நாட்களுக்கு 924 மி.க. அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன்கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.