கோவையில் விநோத நோயால் உயிருக்கு போராடும் 8 மாத பெண் குழந்தை : உதவி கேட்டு பெற்றோர் கண்ணீர்!!

2 March 2021, 4:11 pm
Child Disease Help -Updatenews360
Quick Share

கோவை : போத்தனூர் பகுதியை சேர்ந்த 8 மாத பெண் குழந்தை எஸ்.எம்.ஏ என்ற மிகவும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நிலையில் நோயை குணப்படுத்த ரூ.16 கோடி மதிப்பில் ஊசி போட வேண்டும் என்பதால் குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியை சேர்ந்த தம்பதிகள் அப்துல்லா, ஆயிஷா. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரின் 8 மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப்.

மரபணு பாதிப்பினால் ஏற்படும் அரிய வகையான எஸ்.எம்.ஏ என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தை இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்கும். குழந்தையை காப்பாற்ற குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை ஸீஹா ஜைனப்

ஆனால், இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் ரூ.16 கோடியாகும். அமெரிக்காவில் இருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். குழந்தையை காப்பாற்ற இந்த ஊசியை போட்டாக வேண்டிய கட்டாயத்தில், இவ்வளவு பெரிய தொகையை எப்படி சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.

இது குறித்து ஸீஹாவின் பெற்றோர் அப்துல்லா, ஆயிஷா ஆகியோர் கூறியதாவது, எங்களுக்கு கடந்த 2017-ல் திருமணம் நடந்தது. 2018-ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த 6 மாதத்தில் மூச்சு திணறல் காரணமாக இறந்தது. பின்னர், கடந்த 2020-ல் ஜூன் மாதம் 3.15 கிலோ எடையுடன் ஸீஹா பிறந்தாள்.

முதல் குழந்தை இறந்ததால், 2-வது குழந்தைக்கு ஆரம்பத்திலேயே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தோம். இதில், எவ்வித குறைபாடும் தெரியவில்லை. இந்நிலையில், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களான நிலையில் கால் தூக்கி உதைக்காமலும், கைகளை முட்டிக்கு மேல் தூக்க முடியாமல் இருந்தது.

தாய்பால் குடிக்கும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால், ஈச்சனாரி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம்.
குழந்தையின் மரபணுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைக்கு மரபணு பாதிப்பினால் வரக்கூடிய அரிதான நோயான எஸ்.எம்.ஏ பாதிப்பு இருப்பதாகவும், ஒரு ஆண்டு மட்டுமே குழந்தை உயிருடன் இருக்கும் என கூறினர்.

மேலும், குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்தினால் குழந்தையை காப்பாற்ற முடியும் என்றனர். அமெரிக்காவில் இருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். ஒரு ஊசியின் மதிப்பு ரூ.16 கோடி என்றனர்.

இதே பாதிப்பு உடைய குழந்தை மும்பையில் இருந்ததாகவும், அந்த குழந்தை தற்போது குணமடைந்து வருவதாகவும் கேள்விப்பட்டு அவரின் தாயிடம் பேசினோம். அவர் கூறிய பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பெயர் பதிவு செய்து நிதிக்காக காத்திருக்கிறோம். அந்த நிறுவனத்தினர் இலவசமாக இது போன்ற பாதிப்புள்ள குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசியை அளித்து வருகின்றனர்.

ஆனால், அவர்கள் வருடத்திற்கு 100 குழந்தை என்ற வகையில், குலுக்கல் முறையில் குழந்தைகளை தேர்வு செய்து நிதி வழங்கி வருகின்றனர். நாங்கள் ஊசிக்காக போராடியே காலம் கடந்து விட்டது. எங்கள் குழந்தை இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளார்கள்.

இதனால், ரூ.16 கோடிக்கான ஊசியை வாங்க முடியாமல் தவித்து வருகிறோம். குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறோம். யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் இருக்கிறோம். யாரிடம் இருந்தாவது உதவி கிடைக்குமா என ஏங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Views: - 10

0

0