கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 11:44 am
Quick Share

சென்னை ; கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக்., 23ம் தேதி கார்குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். போலீஸ் விசாரணையில், இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன் (23), பெரோஸ் இஸ்மாயில் (27), உமர் பாரூக் (39) உள்ளிட்ட 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இவர்களை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து உள்ளனர். இவர்களில் ஏழு பேர் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மனு, நீதிபதி இளவழகன் முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். அதன் மீது இன்று விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அவர்களின் போலீஸ் காவலில் விசாரணை முடிந்து பிறகு மீண்டும் இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 331

0

0