தவறான சிகிச்சையால் தந்தை பலி.! கோவை தனியார் கிட்னி மருத்துவமனை மீது மகள்கள் புகார்!!

12 August 2020, 12:23 pm
Cbe Complaint Against Hosp- Updatenews360
Quick Share

கோவை : கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் கிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என முதியவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணனின் மகன் அய்யனார் (வயது 52). இவருக்கு திருமணமாகி ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் இவருக்கு ஏற்பட்ட சிறுநீரக தொந்தரவினால் கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மார்ச் மாதம் இவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததையடுத்து என்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசிகள் ஐந்து முறைக்கு மேல் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல 15 முறைக்கு மேல் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அவருக்கு லிவரில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவர்கள் சதை டெஸ்ட் செய்ததையடுத்து அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அய்யனாரின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பதால் மருத்துவமனை நிர்வாகத்தினரே அய்யனாரை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்ததாகவும், அதற்கான தொகையை மருத்துவமனையில் அவர்களே கட்டியதாகவும் குற்றம் தெரிவித்துள்ள உறவினர்கள், கொரோனா தொற்றுக்கும் அவரின் உயிர் பலிக்கும் தனியார் கிட்னி மருத்துவமனை நிர்வாகத்தினரே பொறுப்பு என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஏற்கனவே ட்விட்டரில் தமிழக முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகத்தினர் வாங்கியுள்ளதாகவும் , ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்த உறவினர்கள் தமிழக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Views: - 1

0

0