கோவையில் மூன்றாவது நாளாக 600ஐ கடந்த பாதிப்பு : 595 பேர் டிஸ்சார்ஜ்!!
26 September 2020, 7:04 pmகோவை: கோவையில் நேற்று 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டிருந்த சூழலில், இன்றும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.
கோவையில் கடந்த 21ம் தேதி கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 648 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பாதிப்பு சற்றே குறைந்திருந்தது.
ஆனால், கடந்த 24ம் தேதி 642 பேருக்கும், நேற்று புதிய உச்சமாக 661 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.
அதன்படி, இன்று கோவையில் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று 5 பேர் பலியானதை தொடர்ந்து கோவையில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 595 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கோவையில் 24 ஆயிரத்து 443 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 859 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.