‘உனக்கு பயந்து கடையை மூடவில்லை’ : கொரோனாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்!

25 March 2020, 9:22 pm
corona-virus-getty-updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

இந்த சூழலில், நேற்று இரவு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் வீணாக வெளியே வருபவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எச்சரிக்கை விடும்படி கோவையில் ஸ்டிக்கர் கடையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, “23-ம் தேதி முதல் 31-ம் தேதி-க்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய் விடு. இல்லையெனில் ஏப்.1-ம் தேதி முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டி விடுவோம். உனக்கு பயந்து கடையை மூடவில்லை, எச்சிரிக்கை விடுகிறோம்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

sticker -UpdateNews360

கொத்து கொத்தாக உலக நாடுகளில் மக்களின் உயிர்களை பறித்து வரும் இந்த கொரோனாவை தடுத்து, இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அனைத்து தரப்பினரும் ஊரடங்கை முழு மனதோடு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த போஸ்டரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.