அரசு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட கோவையில் இன்று 238 பேருக்கு கொரோனா உறுதி : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.!

1 August 2020, 8:23 pm
corona virus new - updatenews360
Quick Share

கோவை: கோவையில் அரசுப் போக்குவரத்துக்கழக பணியாளர்கள் இருவர் உள்பட 238 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் 35 வயது ஆண் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே அலுவலகத்தில் பணியாற்றிய 41 வயது ஆணுக்கும் சனிக்கிழமை கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் பணியாற்றிய பிரிவு அலுவலகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் பணியாற்றிய பிரிவு அலுவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போத்தனூர் 38 வயது ரயில்வே பெண் காவலர் மற்றும் அவரது இரு குழந்தைகள், ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த 53 வயது ஆண், உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 25 வயது ஆண் காவலர், ராஜ வீதியிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வரும் 48 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர பீளமேடு, செல்வபுரத்தில் தலா 12 பேருக்கும், பொள்ளாச்சி, உக்கடத்தில் தலா 10 பேருக்கும், துடியலூர், சரவணம்பட்டி, சுந்தராபுரத்தில் தலா 8 பேருக்கும், போத்தனூர், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், வடவள்ளியில் தலா 7 பேருக்கும், சூலூரில் 5 பேருக்கும், மேட்டுப்பாளையம், பி.என்.புதூர், நீலிக்கோணாம்பாளையத்தில் தலா 4 பேர் உள்பட 155 ஆண்கள், 83 பெண்கள் சேர்த்து மொத்தம் 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,059 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 30 ஆம் தேதி 500 ஐயும், ஜூலை 9 ஆம் தேதி 1000 த்தையும், ஜூலை 19 ஆம் தேதி 2 ஆயிரத்தையும், ஜூலை 25 ஆம் தேதி 3 ஆயிரத்தையும், ஜூலை 28 ஆம் தேதி 4 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி 5 ஆயிரத்தையும் கடந்தது. முதல் 500 பேர் பாதிப்புக்குள்ளாகி மூன்று மாதங்களாகிய நிலையில் தற்போது 3 நாள்களில் 1000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

Views: - 15

0

0