கோவையில் இன்று 395 பேருக்கு கொரோனா பாதிப்பு…!
16 August 2020, 8:12 pmகோவை: கோவையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக இன்று 395 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, நூறடி சாலையில் செயல்பட்டு வரும் நகைக்கடையை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளர். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடையில் பணியாற்றி வந்த 90 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 58 ஊழியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகைக்கடையை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதற்காக தற்காலிகமாக அடைக்கப்பட்டது. ஒரே கடையில் 58 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் நகைக்கடைக்கு வந்த சென்ற நுகர்வோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 40 வயது தலைமை செவிலியர், 40 வயது ஆண் மருத்துவப் பணியாளர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சேர்ந்த 35 வயது பெண் மருத்துவப் பணியாளர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 22 வயது பெண் அலுவலகப் பணியாளர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 22 வயது பெண், உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 38 பேர், செல்வபுரத்தில் 24 பேர், காரமடையில் 19 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், ஆர்.எஸ்.புரத்தில் 12 பேர், போத்தனூர், சூலூரில் தலா 9 பேர், ரத்தினபுரியில் 8 பேர், நீலிக்கோணாம்பாளையம், வடவள்ளியில் தலா 7 பேர், கணபதி, காந்திமாநகரில் தலா 6 பேர், குனியமுத்தூர், சுல்தான்பேட்டையில் தலா 5 பேர் உள்பட 395 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.
0
0