முன்னறிவிப்பின்றி தொழில் நிறுவனங்களுக்கு சீல்… குறுந்தொழிலை நசுக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம் ; குறுந்தொழில் முனைவோர் சங்கம் வேதனை

Author: Babu Lakshmanan
7 September 2022, 4:19 pm
Quick Share

கோவை ; கோவை மாநகராட்சி நிர்வாகம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து இத்தொழிலை நசுக்கி வருவதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் (TACT) கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், தடாகம் சாலை டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த இரு குறுந்தொழில் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து முடக்கி உள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து பேசிய TACT கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், அந்நிறுவனங்களுக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள நபர் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென நோட்டீஸுடன் வந்து அந்நிறுவனங்களை காலி செய்து விட்டதாகவும், அங்குள்ள இயந்திரங்களை எல்லாம் வெளியேற்றி சீல் வைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதனால் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலை பறிபோய் தவித்து வருவதாகவும், இதனை நடத்தி வந்த தொழில் முனைவோர்களும் செய்வதறியாது தவித்து வருவதாக கூறினார். மேலும், கடந்த 20,30 ஆண்டுகளாக, அங்கு அந்நிறுவனங்கள் செயல்பட்டு வரும் போது, யாரோ ஒருவர் அளித்த புகாரின் பேரில், எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் இதனை மேற்கொள்ளலாம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியமே அங்கு ஆய்வு செய்து அனுமதி அளித்த நிலையிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலானது குறுந்தொழிலை நசுக்கும் விதமாக உள்ளதாகவும், இதனால் பெரும் மன உலைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

எனவே தமிழக அரசு தொழில் துறை அமைச்சர்கள் நிர்வாகிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இத்தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Views: - 379

0

0