வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்… வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Author: Babu Lakshmanan
2 June 2022, 8:47 am
Quick Share

கோவை மருதமலை வி.சி.க நகர் பகுதியில் உள்ள வீட்டை சூறையாடிய காட்டு யானைகள், வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை, மருதமலையடிவாரம் அருகே வழக்கமாக வரும் காட்டு யானைகள் அடிக்கடி வி.சி.க நகர், இந்திரா நகர், திடீர் குப்பம், உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லும்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மலையில் இருந்து குட்டியுடன் இறங்கிய 6 காட்டு யானைகள், வி.சி.க நகர் அருகே வந்துள்ளது. அங்கிருந்த பாண்டியம்மாள் (65) என்பரது வீட்டின் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

பாண்டியம்மாள் தனது பேரன் ரவிச்சுந்தருடன் வசித்து வருகிறார். ரவிச் சுந்தர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த வாரம் பாண்டியம்மாள் தனது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ரவி சுந்தர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஆனால் நேற்று தனது கல்லூரி நண்பர் வீட்டிற்கு தூங்கச் சென்றதால் வீட்டில் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வி.சி.க பகுதியில் இருந்து இந்திரா நகர், திடீர் குப்பம் வழியாக, பொண்ணையாராஜபுரம், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் யானை மடுவில் முகாமிட்டது. இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றது.

Views: - 589

0

0