புதையலாக கிடைத்த தங்கக் கட்டிகள்… ஆசை காட்டி ரூ.5 லட்சம் நூதன மோசடி… கோவையில் நடந்த பித்தலாட்டம்..!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 11:48 am
Quick Share

கோவை : தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க நகையை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (45). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது, ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது. ஒரு குடுவையில் தங்க கட்டிகள் இருந்தன. அதனை குறைந்த விலையில் விற்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு தங்க கட்டியை சாம்பிளுக்கு காட்டியுள்ளனர். மேலும், கோவை காந்திபுரம் வந்தால் பல லட்சம் மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை வெறும் ரூ.5 லட்சத்திற்கு தருகிறோம் என தெரிவித்துள்ளனர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பியுள்ளார்.

தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை சென்றுள்ளார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க கட்டிகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பாலு அங்கு நின்றிருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து தங்க கட்டி என நினைத்து போலி தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார்.

பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போலி தங்க கட்டி கொடுத்து ரூ. 5 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 582

0

0