ஈமு கோழியை வைத்து மோசடி : 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை..!
7 September 2020, 2:16 pmகோவை : கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை கிணத்துக்கடவை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் ஜே.பி.ஆர் என்ற ஈமு கோழி நிறுவனத்தை ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்தனர்.
மேலும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களை ரூ.1.66 கோடியை முதலீடாக செலுத்த வைத்தனர்.
இந்த சூழலில், பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமார், ராஜேஸ்வரன், பத்மநாபன், ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து, விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் மூவரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜெயக்குமார் பத்மநாபன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 56 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இந்த சூழலில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0
0