கோவையை ஸ்தம்பிக்க வைத்த கனமழை… சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் : வாகன ஓட்டிகள் தவிப்பு

Author: Babu Lakshmanan
23 November 2021, 8:46 am
Quick Share

கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

கோவையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மழை பெய்யவில்லை என்ற போதும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால், வெயில் இல்லாமல் குளிர்ச்சியான சூழலே நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 8 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை கொட்டியது. காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தேங்கிய மழை நீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சிக்கிக்கொண்டதால் நீண்ட நேரம் போராடி வாகனத்தை இயக்கியும், சிலர் மழையில் வாகனத்தை தள்ளியபடியும் சென்றனர். கோவை இடையர்பாளையம் சந்திப்பு அருகே தாழ்வான இடத்தில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை ஓய்ந்த போதும், லேசான சாரல் மழை தொடர்வதால் கோவை மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Views: - 194

0

0