கோவையில் இளநிலை பொறியாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் : பணியின் போது கறுப்பு பேட்ச் அணிந்து போராட்டம்!!

1 August 2020, 1:31 pm
ATHE 1- updatenews360
Quick Share

கோவை : கோவையில் இளநிலை பொறியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தினர் கறுப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

கோவையில் நெடுஞ்சாலை பணியின் போது இளநிலை பொறியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட நெடுஞ்சாலை துறையில் கிராம சாலைகள் அமைக்கும் பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியம். 57 வயதான இவர், கடந்த 25ம் தேதி மலுமிச்சம்பட்டி – மேட்டூர் சாலையில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, ரோலர் வண்டி ஓட்டுநர் ராஜேந்திரனிடம் அப்பகுதியைச் சேர்ந்த பாலு மற்றும் சாந்தகுமார் ஆகிய இரு நபர்கள் தகராறில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசி சாலை அமைக்கும் பணியை தடுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த இளநிலை பொறியாளரான சுப்பிரமணியம் என்ன பிரச்சனை..? ஏன் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறீர்கள்..? என்று அவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். கணநேரத்தில் இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் மீது பாலு மற்றும் சாந்தகுமார் ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் காவல்துறையினர், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பாலு மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனிடையே, இளநிலை பொறியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் சார்பில் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தலைமறைவாக இருப்பவர்களால் அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், தொடர்ந்து பணி செய்ய முடியாமல், சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, அரசு பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, இளநிலை பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கறுப்பு பேட்ச் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0