கோவையில் தொடரும் கஞ்சா விற்பனை… வடமாநில இளைஞர் உள்பட 2 பேர் கைது… 8.75 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
31 March 2022, 7:34 pm
Quick Share

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 8.75 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 71 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் உட்பட ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்றசம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் பலரும் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக கோவை சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, போதை ஊசி, போன்றவைகளும் கோவையில் அதிகமாக விற்கப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்குட்பட்ட இடங்களில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கபடுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காந்திபுரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றி திரிந்த கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பரை பிடித்து விசாரனை செய்ததில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மறைத்து வைத்திருந்த 7.25 கிலோ கிராம் எடைகொண்ட கஞ்சாவையும் அவர் வைத்திருந்த ரூ 67 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றிய போலீசார், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் காந்திபுரம் பவர்ஹவுஸ் பகுதியில் நடந்த சோதனையில் பீஹாரை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

கைதான ராகேஷ் குமாரிடமிருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சாவும், அவர் வைத்திருந்த 4 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வழக்கில் கைதான ஜெகநாதன் மற்றும் ராகேஷ் குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Views: - 763

1

0