மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று : அதிமுக எம்எல்ஏ வாழ்த்து!!

7 September 2020, 6:25 pm
MTP govt Hosp - updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு ஓ.கே.சின்னராஜ் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய தர நிர்ணய திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளை தேர்வுசெய்து பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆய்வுக்குப் பின் தேசிய தர விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது.

அதில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை 93.1 சதவீதம் மதிப்பெண் பெற்று தேசிய தரச்சான்று பெற தேர்வு செய்யப்பட்டது. கடந்த 31ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதனிடம் தேசிய தரச்சான்று விருது மற்றும் ரூபாய் 14 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கி பாராட்டினார்.

இந்த தொகை மருத்துவமனை மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எனவும், இந்த தொகை மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் இது தனிப்பட்ட முயற்சி அல்ல ஒட்டுமொத்த மருத்துவமனை குழுவினரின் முயற்சி என்று தலைமை மருத்துவர் சேரலாதன் கூறினார்.

தேசிய தரச்சான்று பெற்ற சான்றிதழ், காசோலை ஆகியவற்றை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஓ.கேசின்னராஜிடம் டாக்டர் சேரலாதன் காண்பித்து வாழ்த்து பெற்றார். சான்றிதழ் பெற ஒத்துழைத்த தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் எம்எல்ஏ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மேலும், அரசு மருத்துவமனை வளர்ச்சிக்கு தன்னால் முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது, சமூக ஆர்வலர் தீப்பொறி சாகுல், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.ஜி.ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Views: - 0

0

0